யாழ். பிரதம பொலிஸ் நிலையத்தில் 140 பேருக்கு திடீர் இடமாற்றம்!

Wednesday, March 7th, 2018

யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த முதலாம் திகதி வரை ஒரே தடவையில் 140 பொலிஸார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால்,அங்கு பெரும் ஆளணிப் பற்றாக்குறையை பொலிஸ் நிலையம் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாற்றலாகிச் சென்றுள்ள போதிலும் யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டும் கடந்த முதலாம் திகதி 140 பொலிஸார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தற்போது சுமார் 530 பொலிஸார் பணியாற்றும் நிலையில் ஒரே தடவையில் 140 பொலிஸார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இதேநேரம் இவர்களிற்கான புதிய பொலிஸார் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலும் இதுவரையில் புதியவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் ஓர் இரு நாட்களில் பெரும் எண்ணிக்கைக்கான பொலிஸார் யாழ்ப்பாணம் வருவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குடாநாட்டின் சகல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் அதிக பொலிஸார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் அந்த இடங்களிற்கும் புதிய பொலிஸார் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: