“யாழ்ப்பாணம் அழகான மண்” –  யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் !

Friday, August 26th, 2016

குறிப்பாக இந்தியாவிலிருந்து  யார் வருகை தந்தாலும் முதலில் அவர்கள் சொல்லும் வார்த்தை ‘யாழ்ப்பாணம் அழகான மண்’  ‘ சுத்தமான மண்’ என்பதேயாகும். இது உண்மையான விடயமும் கூட எனத் தெரிவித்தார் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன்.

யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க  நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் “நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட்டு விழா”  நேற்றுமுன்தினம் (24) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகர சபையின் தலைவர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் –

என்னுடைய பிள்ளைகள் ஐரோப்பாக் கண்டத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கண்டியிலும் வாழ்ந்தார்கள்.  “அப்பா எங்களுக்கு யாழ்ப்பாணம் ரொம்பப் பிடிச்சிருக்கு” என என்னிடம் பிள்ளைகள் அடிக்கடி சொல்லுவார்கள் . அவர்கள் அவ்வாறு கூறும் போது  உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும். சமீபத்தில் என்னுடைய சகோதரி டெல்லியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் இன்னமும் ஊரைச் சுற்றியே பார்க்கவில்லை. வீட்டிலே தான் இருக்கிறார். அவர்கள் கூட யாழ்ப்பாணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு எனக் கூறினார்.

யாழ்ப்பாணம் சுத்தமான மண்ணாகவும், அழகான மண்ணாகவும் காணப்பட்ட போதும்  யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் மாத்திரம் சாலையில் இரு பக்கமும் நிறையக் குப்பை கூழங்கள் காணப்படுகின்றன. இதனை அவதானிக்கும் போது எனக்கே மனதுக்கு மிகவும் கஷ்ரமாகவுள்ளது.

பொதுவாக அரச அதிகாரிகள் “அந்த ஏரியா எனக்குக் கீழே வரேலாப்பா….” எனச் சொல்லுவார்கள். ஆனால், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் அவ்வாறு சொல்ல மாட்டார் என நினைக்கிறேன். இந்த நிலையில் குறித்த இடம் சுத்தமாக்கப்பட வேண்டும். அதற்கு நான் கூட என்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Related posts: