யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும் வியாபாரிகளின் குடும்பநிலை – மாற்று நடவடிக்கை வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை!

Friday, April 24th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சமூக .இடைவெளியை பேணுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள சிக்கல் நிலை காரணமாக தொடர்ந்தும் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுச் சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வியாபாரிகளும் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்  உணவகங்ஙளின் உரிமையாளர்களும் பல்வேறு இடர்பாடுகளையும் பொருளாதார நஷ்டங்களையும் சந்தித்துவரும் நிலை உருவானகியுள்ளது.

இந்நிலையில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் சந்தை வியாபாரிகளது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உணவகங்கள் தொடர்பிலும் ஆரோக்கியமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு தர துறைசார் தரப்பினர் அக்கறை கொள்ளவில்லை என குறித்த சந்தை வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் காணப்படும் பொதுச் சந்தைகளான திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, நெல்லியடி, சங்கானை, கொடிகாமம்  உள்ளிட்ட யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்து சந்தைகளும் சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள சிக்கல் காரணமாக மீளவும் திறக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் குடாநாட்டிலுள்ள உணவகங்களும் சுகாதார நடைமுறை காரணமாக மீள திறக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் உள்ளூர் வியாபாரிகளும் அந்த சந்தை தொகுதிகளுக்குள் இருக்கும் வியாபாரிகளும் உணவக உரிமையாளர்களும் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமையால் நாளாந்தம் பெரும் நஷ்டங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலை காணப்படுகின்றது.

இதே நேரம் அரசாங்கம் விவசாய உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் உள்ளூரில் அவ்வாறான கொள்வனவு நிலைகள் இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கும் வியாபாரிகள் தமது மரக்கறி வகைகளை அநியாய விலையில் விற்பனை செய்யவேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்

அதுமட்டுமல்லாது பொதுச் சந்தைகளில் வியாபார நடவடிக்கைளை மேற்கொண்டு நாளாந்த ஜீவனோபாயத்தை முன்னெடுத்துவந்த வியாபாரிகளும் தமது குடும்ப வருமானத்தை முற்றாக இழந்துள்ளநிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது குறித்த மாவட்டங்களில் காலை 5 மணிமுதல் முன்னிரவு 8 மணிவரை நாளார்ந்தம் தளர்த்தப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக நாளாந்தம் உழைத்து குடும்ப வருமானம் ஈட்டும் பலர் தத்தமது தொழில் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பதித்திருந்தபோதும் யாழ். மாவட்டத்தில் உணவகங்கள் திறக்கப்படுவதை சுகாதார தரப்பினரால் தடுக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி சுகாதாரமான நடவடிக்கைகள் போன்றன குறித்த உணவகங்களில் பேணப்படாது போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதனாலேயே இந்த நடைமுறை இருப்பதாக கூறும் சுகாதார தரப்பினர், அந்த உணவகங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்துக்கான வழிகளையோ அதற்கான பொறிமுறை ஒன்றையோ இதுவரை மேற்கொண்டு கொடுக்கவில்லை என்றும் பாதிக்க்பட்டுள்ள சிறிய உணவகங்களின் உரிமையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளர்.

அந்தவகையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இடர்கால கொடுப்பனவுகள் ஒருசில வியாபாரிகளுக்கு கிடைத்திருக்கின்றபோதிலும் அது அவர்களுக்கு தொடர்ச்சியான குடும்ப பொருளாதாரத்துக்கான ஒன்றாக அமையப்போவதில்லை.

எனவே இது குறித்து துறைசார் தரப்பினர் அவதானம் கொண்டு அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்து அவர்களது நாளாந்த வருமானத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்மும் என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: