கைகுலுக்க மறுப்பு:  இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு!

Saturday, April 21st, 2018

பிரான்ஸில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார். அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தனக்கு பிரான்ஸ் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு தென்கிழக்கு இஸ்ரே பிராந்தியத்தில் நடந்த, குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அப்பெண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்ட அப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரான்ஸ் அதிகாரிகள், அவருடன் கைகுலுக்க முன்வந்தனர். ஆனால், தங்கள் மத வழக்கப்படி கை குலுக்குவதில்லை எனக் கூறி அப்பெண் மறுத்துவிட்டார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத பிரான்ஸ் அதிகாரிகள், கைகுலுக்க மறுப்பவர் எங்கள் நாட்டு பிரஜை ஆக முடியாது எனக் கூறியதுடன், அவரின் பிரான்ஸ் குடியுரிமையையும் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை.

இதன் பின்னர், குறித்த பெண் மேல்முறையீடு செய்தபோதும் நீதிமன்றம் அவருக்கு குடியுரிமை பெறும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளதுடன், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என மாநில கவுன்சில் விளக்கம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: