யாழ்ப்பாணத்தில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களால் மூடப்பட்டன விற்பனை நிலையங்கள்!

Saturday, October 31st, 2020

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும், கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், அவருடன் தொடர்புடைய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சுயதனிமைப் படுத்தப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் மறுநாள் 26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து உணவக உரிமையாளர் முச்சக்கர வண்டியில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் முச்சக்கர வண்டியில் வேலணை, புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

அத்துடன், உணவக உரிமையாளர் யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தினங்கள் நடமாடியுள்ளார். அத்துடன், வைமன் வீதியில் உள்ள சிகையலங்கரிப்பு நிலையம், கோயில் வீதியில் உள்ள உணவகம் என்பவற்றுக்கும் சென்றுள்ளார்.

அதனால் சிகையலங்கரிப்பு நிலையம், உணவகம் என்பன மூடப்பட்டுள்ளன. அந்த இடத்தை சேர்ந்தோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக் கணக்கானோர் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் சில வர்த்தக நிலையங்கள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: