யாழில் மீண்டும் டெங்கு – 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, August 28th, 2020

யாழ் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த வாரத்தில் 6 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு,

கடந்த 17.08.2020 முதல் 23.08.2020 வரையான ஒரு வாரகாலத்தில் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் டெங்கு காய்ச்சல் தொற்றால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருமாக ஆறு பேர் இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் இவ்வாறு 17 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவ்வருடம் 01.01.2020 தொடக்கம் 23.08.2020 வரையான காலப்பகுதியில் 894 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இவ்வருடம் 01.01.2020 முதல் 30.07.2020 வரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: