யாழில் உரிமை கோரப்படாத தனியார் காணிகளில் புதிய குடியேற்றத்திட்டம் அமைப்பு!

Saturday, January 5th, 2019

யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டில் இல்லாது உரிமம் கோரப்படாமல் உள்ள தனியார் காணிகளைச் சுவீகரித்து புதிய குடியேற்றத் திட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ் நகரை அண்மித்த கொழும்புத்துறை பகுதியிலேயே பல காலமாக உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 300 பரப்புக் காணி அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடத்திலே முதற்கட்டமாக புதிய குடியேற்றத் திட்டமொன்று அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் நகர் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக நகரை அண்மித்த பகுதிகளில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் இந்தக் காணியைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இந்த 300 பரப்புக் காணியில் தன்னுடைய சுமார் 80 பரப்புக் காணி இருப்பதாக பெண் ஒருவர் யாழ் அரச அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதன்போது உரிமம் கோரப்படாமலும் பாவனையில்லாமலும் இருந்த காணிகளையே எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் இருந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆயினும் அந்த 80 பரப்புக் காணியின் உரிமையாளர் தனக்கு நஷ்டஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தன்னுடைய காணியே தனக்கு வேண்டுமெனக் கேட்டதற்கமைய அவருடைய காணியை விடுத்து ஏனைய 220 பரப்புக் காணிகளையும் சுவீகரித்து அங்கு புதிய குடியேற்றத் திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts:

நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அ...
துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடை...