யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Thursday, May 9th, 2024

நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதார மாற்றச் சட்டத்தில் அரசாங்கம் நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புகளை நோக்கமாகக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதேபோன்ற பல சட்டங்களுடன், பொருளாதார மாற்ற சட்டமூலம் (Economic Transformation Bill), அரச நிதிச் சட்டமூலம் (Public Finance Bill) மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டமூலம் (Public Debt Management Bill) என்பவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதனிடையே 1930 இற்குப் பின்னர், சுமார் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்கும்  ‘உறுமய’ திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஊடாக முழுமையான காணி உறுதி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் இந்த வேலைத் திட்டத்தால், இலங்கை முழுவதிலும் ஆயிரக்கணக்கான விவசாய வர்த்தகர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாய உற்பத்தித்திறன் மேம்பாட்டின் அடிப்படையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளை வலுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மீட்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக  பாரிய முதலீடு மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க திறைசேரியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்  தொடர்பான விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

000

Related posts: