மோசடி வியாபாரிகளால்தான் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!

Sunday, September 12th, 2021

நாடு கொரோனா தொற்றால் அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மோசடி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பதானாலேயே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அதற்கு வேறு நோக்கம் எதுவும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொள்வதாக எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் மூலம் அடக்குமுறை ஒருபோதும் மேற்கொள்ளப்படாது.

உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் மோசடி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பதாலே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, இந்த அவசர காலச் சட்டம் அடக்குமுறைக்காக கொண்டுவரப்படவில்லை. மக்களின் பசியைப் போக்க குறைந்த விலையில் பொருட்களை வழங்கக்கூடிய சகாப்தத்தை உருவாக்க மலிவான விலையில் பொருட்களை வழங்கும் திட்டத்திற்காகவே கொண்டு வரப்பட்டது. வேறு நோக்கம் எதுவும் இல்லை.

இந்த அச்சுறுத்தல் நேரத்திலும் ஆட்சிக்கு வருவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. விருப்பமில்லாத நிலையிலும் அவசர நிலையை கொண்டுவந்து இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால், மக்கள் சுரண்டப்படும் ஒரு சகாப்தம் உருவாகும். சமீபத்திய நாட்களில் நாம் அதனை தான் அனுபவித்தோம். பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

சீனி அதிக விலைக்கு விற்கப்பட்டதால் சீனி மீதான வரி குறைக்கப்பட்டது. மக்களுக்கு குறைந்த விலையில் சீனியை வழங்குவதற்காக சீனியின் மீதான வரி 25 சதங்களாக குறைக்கப்பட்டது. சீனி வரியை குறைத்து திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றன.

அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் இதேபோல் வரி குறைக்கப்பட்டது. அது ஒன்றும் புதிதல்ல. உலக சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கும்போது, ​​வரிகள் குறைக்கப்படுகின்றன. உலக சந்தையில் சீனியின் விலை குறையும் போது, ​​வரிகள் அதிகரிக்கப்பட்டு, அந்த வருமானத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பெறப்பட்ட பணம் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. அன்றும் எதிர்க்கட்சிகள் சேறு பூசின. இன்றும் எதிர்க்கட்சிகள் சேறு பூசுகின்றன.

சீனி மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது விலை கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை அரசு எடுத்தது. அத்தகைய முடிவுகளை எடுக்க முடியாவிட்டால், அரசாங்கமொன்று எதற்கு? ஜனாதிபதி ஒருவர் எதற்கு? அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்துள்ளது. எனவே, நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என்று நான் எதிர்க்கட்சிகளுக்கு கூற விரும்புகிறேன்.

இதேவேளை இந்த நாட்டில் அப்பாவி ஆசிரியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் மத்தியில் எதிர்க்கட்சி குழுக்கள் புகுந்து அவர்களை வீதிக்கு இறக்கி மரண சகாப்தத்தை உருவாக்கின.

கொவிட் தடுப்பு செயற்திட்டத்தின் கீழ் முதல் பத்து நாடுகளிடையே எமது நாட்டை கொண்டு வந்தபோது, ​​அவர்கள் இந்த நாட்டு மக்களை எப்படியாவது கொல்வதற்கு முயன்றார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். அந்த நேரத்தில் அவசர நிலை கொண்டுவரப்பட்டு அனைத்து போராட்டங்களும் ஒடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்?

ஆனால் , அந்த நேரத்தில் அவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாத காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களுக்கு கோவிட்டை பரப்பினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தும் உலகின் முதல் 10 நாடுகளிடையே எமது நாடு முன்னணியில் உள்ளது. அதைப் பற்றி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தடுப்பூசி போட வேண்டாம் என்று தான் பிரேமதாச குழு பிரசாரம் செய்தது,

தடுப்பூசி திட்டத்தை தோல்வியடையச் செய்வதையே எதிர்க்கட்சி செய்துவருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தடுப்பூசி வழங்குவதை வெற்றிகரமாக முன்னெடுக்கவே பாடுபடுகிறது. மக்களும் இந்த தடுப்பூசியைப் பெற விரும்புகிறார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளின் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக எமது நாட்டில் கொவிட் தொற்றை ஒழிக்க எதிர்பார்க்கிறோம். மக்களை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்வதை தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன. அவர்கள் 1971 இல் 12,000 பேரைக் கொன்றனர். 88/89 இல், சுமார் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் கோவிட் தொற்றுநோய் மூலம் மக்களை கொல்ல முயற்சிக்கின்றனர். கோவிட் ஊடாக மக்கள் இறப்பதை காணவே இவர்கள் விரும்புகிறார்கள். இன்று அத்தகைய எதிக்கட்சி தான் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: