மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் – நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை..!

Tuesday, May 23rd, 2023

வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஆகவே, கடவுச்சீட்டுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய பொது மக்களிடம் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த பின்னணியில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு நேரம் மற்றும் காலத்தை ஒதுக்கிக்கொள்ள இணையவழி முறைமை ஊடான வழிமுறை கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்துக்கான இணையவழி முறைமை ஊடான விண்ணப்பம் சமர்ப்பிப்பு கடந்த 17ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள திணைக்களத்துக்கு வருகை தரும் பொது மக்களின் விண்ணப்பங்கள் டோக்கன் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வழமையான தன்மை பின்பற்றப்பட்டது.

வரிசையில் நிற்காமல் கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த முறைகேடான செயற்பாட்டுடன் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டுள்ளதாக அறிய முடிந்தது. அவருக்கு எதிராக திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரிசையில் இருக்காமல் கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு நிதி மோசடி செய்த 16 பேர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வளாகத்தில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: