பிரதமர் மோடிக்கு இலங்கை சிவசேனை பாராட்டு

Monday, May 15th, 2017

இலங்கையின் இந்துக்கள் தங்கள் வழிபாட்டுக் கடமையைச் செய்வதற்குக் காசிக்குச் செல்வதற்குக் கொழும்பிலிருந்து வானூர்திச் சேவையை ஆரம்பிப்பதற்கான ஒழுங்கினை இந்தியப் பிரதமர் மேற்கொண்டிருப்பதனை  இலங்கையில் இயங்கி வரும் சிவசேனை அமைப்புப் பாராட்டி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக சிவசேனை அமைப்பின் தலைவர்  மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை இந்துக்களுக்கும், காசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நல்லூரில் சங்கிலியன் தோப்பிலிருக்கும் யமுனை ஏரி ஒரு சான்று. யமுனையிலிருந்து ஆரியச் சக்கரவர்த்திகள் கொணர்ந்த நீரால் அமைந்த ஏரியே யமுனை ஏரி. யாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்து காசிக்குச் சென்று வாழ்ந்து வடமொழி தமிழ் இரண்டிலும் புலமைபெற்ற பெருமகனாரின் பெயரே காசிவாசி செந்திநாதய்யர்.

அண்மைக் காலமாக இலங்கையருக்குச் சொந்தமான திருமடத்தைக் காசியில் நிறுவி இலங்கையிலிருந்து போவோர் வருவோருக்கு வசதி செய்துள்ளனர் ஐரோப்பா வாழ் தமிழர்.

ஒருவர் இறக்கும் நேரத்தில் காசித் தீர்த்தம் பருக்கும் வழமை ஈழத் தமிழர் மரபு. அவர் இறந்தபின் உடலை எரித்து, சாம்பலை பிரயாகையில் யமுனை, கங்கை, சரசுவதி கலக்கும் இடத்தில் கரைப்பதும் நீத்தார் கடன் ஆற்றுவதும் பின்னர் காசிக்கு வந்து கங்கையில் மூழ்கி நீத்தார் கடன் செய்வதும் ஈழத் தமிழர் மரபு.

காசிக்கு வழிபாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈழம் திரும்பியதும் அடியவர்களை அழைத்து, திருநீறு கொடுத்து, காசிக்குக் கயிறு கட்டி, திருமுறைகள் ஓதி, அன்னம் பாலித்து விழாக் காணலும் ஈழத் தமிழரின் பண்டைய மரபு.

இக்காலத்தில் பலர் திருக்கயிலாயப் பயணம் மேற்கொள்வர். காசியிலே குளிராடைகள், போர்வைகள், காலணிகள் வாங்கும் கடைகள் உள. அவற்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து காத்மண்டு நகர் செல்லலாம், வானூர்தியிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம். காத்மண்டிலிருந்து தரைவழி திருக்கயிலாயம் சென்று மீளலாம். காசிக்கான வானூர்தித் தொடர்பால் இலங்கை இந்துக்களுக்குத் திருக்கயிலாய வழிபாட்டுப் பயணம் எளிதாகும்.

எதிர்பார்க்காத பெரும் கொடையாகப் பிரதமர் மோடி காசிக்கு வானூர்தி வசதியை அறிவித்துள்ளார். இலங்கை இந்துக்களாகிய நாம் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம், போற்றுகிறோம்.

காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு சிதம்பரம் திருக்கோயில் வழிபாட்டுப் பயணத்துக்கு இலங்கை அரசு அனைத்து உரிமங்களையும் வழங்கி உள்ளது. இந்திய அரசின் ஒத்துழைப்புக் கேட்டு எழுதியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் இந்திய அரசின் அனுமதியை வழங்குவதுடன் வழிபாட்டுப் பயணத்துக்காக அந்தமான் தீவுப்பகுதியில் உள்ள பயணக் கப்பல் ஒன்றையும் தந்துவுமாறு சிவசேனை சார்பில் விண்ணப்பிக்கிறோம் என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: