பணிப்பகிஷ்கரிப்புக்குத் தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

Friday, August 11th, 2017

நாட்டின் 332 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து கிராமசேவையாளர்களும் ஒன்றிணைந்து மாபெரும் பணிப் பகிஷ்கரிப்பொன்றில் இறங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாங்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எவ்வித சிரத்தையையும் காட்டாமல் புறக்கணித்து வருகின்றது.

இன்னும் இரு வாரங்களில் தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கா விட்டால் மேலதிக அறிவித்தல்கள் எதுவுமின்றி நாடு தழுவிய பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகவும் அகில இலங்கை கிராம சேவையாளர்களின் சங்கச் செயலாளர் டபிள்யூ. ஜீ. கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல பணிகள் பிரதேச செயலகங்களிலுள்ள அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பதை நிறுத்துதல். கிராமசேவையாளர் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல், அவர்களின் சேவைக்கான சரியான சட்டதிட்டங்களை வடிவமைத்தல் ஆகியவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அண்மையில் சமர்ப்பித்துள்ள பிரேரணையின்படி கிராம சேவையாளர்கள் இதுவரை காலமும் மேற்கொண்டு வந்த ஏழு பணிகள் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி செயலகம் அறிமுகப்படுத்தியுள்ள உணவுப்பொருட்கள் உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, மது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, போஷணை அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு, தேசிய டெங்கு ஒழிப்புப் பணி, கிராமிய மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் தகவல்களைச் சேகரித்தல், கிராமசேவையாளர் மட்டங்களில் அபிவிருத்திக் குழுக்களை அமைத்தல் போன்ற விவகாரங்களில் கிராம சேவையாளர்களின் பங்களிப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரேரணையின்படி மட்டுப்படுத்தப்படவுள்ளது.

மேற்கூறிய பிரச்சினைகளுக்கு இன்னும் இரு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் நாங்கள் போராட்டத்தில் இறங்கவுள்ளோம் என அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: