நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் – இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Friday, April 8th, 2022

‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ எனும் கொள்கைக்கு இணங்க, நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள் உட்பட சுமார் 2.5 பில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளதாக அமைச் சின் பேச்சாளரான அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

270,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல், 40,000 மெட்ரிக் தொன் அரிசி என்பன இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அத்தியவசிய உணவு பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசாங்கம் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை நேற்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசும் போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார்.

அயல் நாடான இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு உதவிகளை வழங்க தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களின் நலன்களுக்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், மருந்து போன்றவற்றை அனுப்பி வைக்க தமிழக அரசாங்கம் தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுப்பி வைக்கும் பொருட்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ஊடாக விநியோகிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் தனது கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: