மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
 Friday, September 29th, 2023
        
                    Friday, September 29th, 2023
            
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று ஓரே தீர்மானம் – ஒரே பாதை என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ள நிலையில், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் பேர்லின் நகரில் நேற்று இடம்பெற்ற பேர்லின் குளோபல் மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும், அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக பணவீக்கம், எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம்.
இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும்.
அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன. வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன.
இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.
இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன.
அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது. நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால், நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை.
இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் கடன் நீடிப்பு உள்ளிட்ட இரு சவால்களுக்கும் இலங்கை போன்ற நாடுகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக பயன்படுத்துவதற்கு எம்மிடத்திலுள்ள நிதியங்கள் போதுமானதாக இல்லை என்பது கவலையளிக்கின்றது.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடம் எமக்கான 100 பில்லியன்கள் உள்ளன. ஒன்றுமே இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதற்கு மாறாக இருக்கும் தொகையை கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பின்னர் அடுத்த தொகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2030 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 26.5 டொலர் பில்லியன்கள் அவசியப்படும். சர்வதேச நாணய நிதியம் கூறுவதை போல நாம் அதிஷ்டமான நாடு என்றால் அடுத்த சில வருடங்களுக்குள் 3.5வீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும் என்றும் எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோல் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உலக அளவில் உள்ள தலைமைத்துவங்களும் தொடர்பாடல்களும் போதுமானதல்ல.
அதனால் புதிய திட்டமிடல் ஒன்று அவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        