முல்லையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் 21,702 பேர்!

Thursday, July 7th, 2016

முல்லைத்தீவு மாவட்டத்தில் 41,465 குடும்பங்களைச் சேர்ந்த 130,332 சனத் தொகையில் 21,702 பேர் வேலையற்றவர்களாக உள்ளனர் என முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணிப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கரைத்துறைப்பற்று பிரதே செயலக பிரிவில் 5979 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 4932 பேரும், ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் 5429 பேரும், துனுக்காய் பிரதேசத்தில் 855 பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 615 பேரும், வெலியிஓயா பிரதேசத்தில் 3892 பேரும் என பிரதேச செயலக பிரிவின் அடிப்படையில் காணப்படுகின்றனர்.

இவர்களில் 6753 பேர் க.பொ.த.சாதாரண தரம் தகைமையிலும், 3180 பேர் க.பொ.உயர்தரம் தகைமையிலும், 199 பேர் பட்டதாரிகளாவும், இவர்களை தவிர ஏனையவர்களாக 11570 பேரும் வேலையற்று காணப்படுகின்றனர் என மாவட்டச் செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனைத் தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 19207 பேர் தொழில் புரிபவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் அரச தொழில் 2436 பேரும், அரை அரச தொழில் செய்பவர்களாக 657 பேரும், அரசசார்பற்ற நிறுவனங்களில் 1093 பேரும், தனியார்துறைகளில் 15021 பேரும் தொழில் புரிபவர்களாக உள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: