முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முக்கிய விடயங்கள் வெளியாகின!

Monday, July 17th, 2017

இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட, மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் விசாரணையின் போது பல முக்கியமான விடயங்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த மோசடியுடன் தொடர்புப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.

ஒரு பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்காக முறிகளை ஏலத்தில் விடுவதற்கு 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.இதன்போது 20 பில்லியனுக்கும் அதிகமான தொகை விலைக்கேள்வி ஏலத்தின் மூலம் கிடைத்த போதிலும், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் ஆலோசனையின் படி அரச கடன் கூட்டுத்தாபனம் 10 பில்லியனை ஏலத்தில் பெற்றுக் கொண்டது.

எனினும், இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சர்ச்சைக்குரிய முறிகள் ஏலத்தின் போது, அதிகமான விலைக்கேள்வி முன்வைக்கப்பட்டமையால், பேப்பர்ச்சுவல் ட்ரஷரிஸ் எனப்படும் முதல்நிலை வணிக நடவடிக்கையாளர், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அர்ஜூன் அலோசியஸ் பேப்பர்ச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் தொடர்புபடுவதுடன், கசுன் பாலிசேன, பேப்பர்ச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக செயற்படுகின்றார்.

அர்ஜூன் அலோசியஸ் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரான அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் என்பதுடன், அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலத்திலேயே முறிகள் விநியோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதற்கான ஏலத்திற்கு பேப்பர்ச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் 15 பில்லியன் விலை மனுக்கோரலை முன்வைத்ததுடன், அதில் 13 பில்லியன், மற்றுமொரு முதல் நிலை வணிக நடவடிக்கையாளரான, இலங்கை வங்கியூடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சமூகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதுடன், இங்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் மதிப்பீடு செய்திருந்தார்.முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு முன்னிலையில் கணக்காய்வாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

பேப்பர்ச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட விதம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.கொடுக்கல் வாங்கலில் உண்மையான பிரதிபலனை பெறுபவரை மறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

இதன் மூலம், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நட்டம் ஏற்படுவதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் இடைத்தரகராக பான் ஏஷியா பேங்கிங் கோபரேஷன் நிறுவனம் செயற்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.

இதன்மூலம், பேன் ஏஷியா பேங்கிங் கோபரேஷன் நிறுவனம் குறிப்பிடத்தக்களவு இலாபமடைந்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இந்த செயற்பாட்டிற்காக பேப்பர்ச்சுவல்  ட்ரஷரிஸ் நிறுவனம், நிதித் தரகர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேன் ஏஷியா பேங்கிங் கோபரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா அவரது தனிப்பட்ட பிணையங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான என்.பி கெபிட்டல் நிறுவனத்தின் பிணையங்களை தனது வங்கியூடாக ஊழியர் சேமலாப நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளதாக மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியது.இந்த செயற்பாடுகளினால், நன்மைகளைப் பெற்றுக் கொண்ட தரப்பினரை கண்டறியும் விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது, ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் செயற்பட்ட அதிகாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது, சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட மேலதிக பணிப்பாளர் சமன்குமார என்பரே இதனை மேற்கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சமன்குமார, அதிக சொத்துக்களை ஈட்டிய விடயம் சர்ச்சைக்குரியது என்பதால், அவருடைய நிலைப்பாடு தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.சமன்குமார, இன்று (17) முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.

 

Related posts: