மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக வடக்கு, கிழக்கில் 11ஆயிரம் வீடுகள், ஆயிரம் வீடுகள் முழுமையாகப் பூர்த்தி – அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி!

Saturday, October 29th, 2016

இலங்கை மீள்குடியேற்ற அமைச்சு 2016ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் ஊடாக வட,கிழக்கு மாகாணங்களில் 11 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்றது. 2017ஆம் ஆண்டிலும் பெருமளவு நிதியை ஒதுக்கி வீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் எனக் கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி வீடுகளை மட்டுமல்லாமல் உட்கட்டமைப்பு வசதிகளையும் தமது அமைச்சு செய்து தருவதாக கூறியுள்ளார். மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளை அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி மற்றும் யாழ்.மாவட்ட செயலர், அதிகாரிகள் கொண்ட குழு கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தது. மேற்படி ஆய்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்:

வட, கிழக்கு மாகாணங்களில் 11 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்றிட்டத்தை மீள்குடியேற்ற அமைச்சு 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது. இவற்றில் 1000 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரம் வீடுகள் நிறைவடையும் கட்டத்தில் காணப்படுகின்றது. மேலும் 4 ஆயிரம் வீடுகள் தற்போது அமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் பெரும்பாலான வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படும். மேலும் இந்த வீட்டுத்திட்டமானது வீட்டின் உரிமையாளர்களே கட்டுவதற்கான 8 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டமாகும். இதன் ஊடாக வீடு கிடைப்பதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான உதவிகளும் கிடைத்து வருகின்றது.

மேலும் வட, கிழக்கு மாகாணங்களில் 2100 பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான தலா 2இலட்சம் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சே வழங்கியிருக்கின்றது. இதேபோல் வட,கிழக்கு மாகாணங்களில் 7600 மலசல கூடங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றது. அகதிகளாக இந்தியா சென்று திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றோம். – என்றார்.

sivaganasothy

Related posts: