மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு ஒப்புதல்!

Saturday, September 16th, 2023

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடும் பின்னணியில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் செயற்பாடுகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் முக்கிய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போதே இதுதொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி, படகு உரிமையாளரைத் தவிர, படகின் ஓட்டுநர் மற்றும் கப்பலில் உள்ள எந்தவொரு நபருக்கும் தண்டப்பணம் விதிக்கப்படலாம்.

இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால்  சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவரும் பின்புலத்தில் இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திலும் மீனவர் விவகாரம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்புக்குள் சர்வதேச நாடுகளில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதும் சட்டத்தின் நோக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: