சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம் – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவும் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Wednesday, July 27th, 2022

புதிய சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

முன்னதாக சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அதனால் சபை முதல்வர் பதவி வெற்றிடமானதையடுத்து, அதற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆளுந்தரப்பின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டுவந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்பதவிக்கு மீளவும் நியமிக்கப்படடுள்ளார்.

இதனிடையே

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ரணில் விக்ரமசிங்க, தமது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து கடந்த 21 ஆம் திகதிமுதல் விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று சபைப்படுத்தினார்.

கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானார்.

இந்த நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, வஜிர அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அவரது பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியின் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய சபை அமர்வில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: