மீனவர்கள் பிரச்சினை விடயம்: தீர்வுக்கான  பேச்சுவார்த்தை மே மாதம் ஆரம்பம்!

Saturday, March 26th, 2016

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்கு  தீர்வுகாண்பதற்கான பேச்சுக்கள் வரும் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கை மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பேச்சுக்கள் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

இந்திய மீனவர்களால் இலங்கை கடல் வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைதுசெய்தல் மற்றும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருமாறு அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பின் பிரகாரம் எதிர்வரும் மே மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக இந்திய மீனவர்கள் 90 இற்கும் அதிகமானோர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சுமார் 100 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதேபோன்று சுமார் 20 இற்கும் அதிகமான இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இரு நாட்டு மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் பரிமாற்றிக் கொள்வதற்கு எதிர்ப்பார்க்கின்ற அதேவேளை, இந்திய மீனவர்களின் படகுகள் எக்காரணங்கொண்டும் விடுவிக்கப்பட மாட்டாது என்றும் கடற்றொழில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: