ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது ஆணைக்குழு!

Tuesday, February 23rd, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஜனாதிபதியால் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் காவல்துறைமா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் குறித்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கான தகைமை தொடர்பில் ஆராய்வதற்காக, குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கை 600 இற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின், சிங்கள மொழிப்பெயர்ப்பு, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதா என்பதை ஆராய சட்டமா அதிபருக்கு அறிக்கையை அனுப்புமாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கை தொடர்வது குறித்து, சட்டமா அதிபரினால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: