மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!

Wednesday, March 9th, 2022

பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக 149 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்றும் (09) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I மற்றும் J ஆகிய வலயங்களில் இன்று(09) காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், குறித்த வலயங்களில் மாலை 06 மணிக்கும் இரவு 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணிக்கும் மாலை 05 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 02 மணித்தியாலங்களுக்கு மின் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வலயங்களில் மாலை 05 மணிக்கும் இரவு 09 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின் வழங்கல் துண்டிக்கப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: