மாகாணசபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் – குற்றம் சாட்டுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான்!

Tuesday, October 12th, 2021

மாகாணசபைகள் கடந்த மூன்றரை வருடங்களாக அழிந்துபோய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் – ”எனது முதலாவது நாடாளுமன்ற உரையின்போது அதிகார பகிர்வு விடயத்தில் மாகாணசபை முறைமை மட்டுமே எமது கைகளில் உள்ளது, அதனைபலப்படுத்தியெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

2017ஆம் ஆண்டு மாகாணசபை முறைமையில் வந்த சட்டத்தை சரியாக நடத்தி முடித்திருக்கலாம். ஆனால் நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழைத்த தவறுதான் மாகாணசபை தேர்தல் தாமதமடைந்ததற்குக் காரணமாகும். ஐம்பதிற்கு ஐம்பது, வட்டாரமுறை என்றெல்லாம் கொண்டுவந்து குழப்பியடித்து எல்லாவற்றையும் குழப்பிவட்டனர்.

சட்டமூலம் வந்தபோதுகூட தமிழில் அதனை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியவர் சுமந்திரன். ஆகக்கூடுதலாக ஆங்கில மொழியை பயன்படுத்துபவரும் சுமந்திரன் தான். ஆகையால் அவரது உள்ளக அரசியல் காரணமாக அவர் முடிவெடுக்கக்கூடிய ஆட்சியில் இருந்தபோதுகூட மாகாணசபை முறைமை மூன்று வருடங்களாக அழிந்துபோய் கிடப்பதற்கு பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

ஆனால் தற்போதிருக்கின்ற அரசாங்கம் வந்ததிலிருந்து தேர்தலை நடத்தவேண்டுமென்ற முன்மொழிவை வைத்துக்கொண்டேயிருந்தது. அது சாத்தியமாகக்கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது. அடுத்தவருடம் மூன்றாம் மாதமளவில் தேர்தல் அறிவிப்பை அரசாங்கம் செய்திருக்கின்றது.

கிழக்கு மாகாணம் தனித்துவமான மாகாணமாகும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் தலைமையை தீர்மானிக்கின்ற தேர்தலாக அதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்தத் தேர்தலில் நல்லதொரு முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்து இந்த மாகாணத்தை கட்டியெழுப்ப அவருடன் இணைந்து உழைக்க வேண்டும்..

2008ஆம் ஆண்டு தேர்தலில் எங்களால் போட்டியிட முடியாது எனவும் வடக்கு கிழக்கு இணையாத மாகாணத்தில் போட்டியிட முடியாதென்று பேசியவர்கள் இன்று தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே போட்டியாளர்களை தெரிவு செய்து களத்தில் குதித்திருக்கின்ற நிலைமையை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எதிர்காலத்தில் சிறந்த ஒரு முதலமைச்சரை வடக்கு கிழக்கு பெற்று சிறப்பான அதிகாரத்தை நோக்கிய கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் பங்கெடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: