மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு!

Wednesday, May 29th, 2019

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில்சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related posts:

நாட்டின் மருந்து தேவையில் 50 வீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வ...
வடக்கில் திங்கள்முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு - சுகாதார சேவை...
டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் ...