பிற மாவட்டங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும்

Sunday, November 26th, 2017

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் வெளிமாவட்டங்களிலிருந்து சென்று பணியாற்ற போக்குவரத்துக்களும் தங்குமிட வசதிகளின்மையும் தடையாக உள்ளன. இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோருகிறது.

வெளிமாவட்டங்களுக்குச் சென்று பெரும் மனச் சுமைகளோடு பணியாற்றும் ஆசிரியர்களின் நலன் சார்ந்து சிறிதளவேனும் சிந்திக்காமல் வடக்குமாகாணத்தின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு கருதுகின்றதா? என்றும் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சு விரல் அடையாள இயந்திரப் பதிவு முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அது சார்ந்த நடவடிக்கையைப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முன்னர் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் இதர வசதி வாய்ப்புகளின் சாதக பாதக நிலைகளைக் கருத்தில் எடுத்து பாடசாலைகளுக்கான நேர நிர்ணயம் வடக்கு மாகாண கல்வி அமைச்சால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பல மாவட்டங்களிலுள்ள பல பாடசாலைகளுக்குக் காலை 7.30 மணிக்கு முன்னர் சென்றடைய முடியாத போக்குவரத்தும் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் சீர் செய்யப்படாமலேயே பாடசாலைகள் அனைத்தும் அரை மணிநேரம் முன்னராக 7.30க்கு ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண கல்விஅமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

விரலடையாளப் பதிவிடலில் சட்டம் பற்றிப் பேசும் அதிகாரிகள் பாடசாலை நிறைவடைந்த பின்னரும் ஆசிரியர்களை மறித்து மேலதிக நிகழ்வுகளையும், ஆசிரியர் கூட்டங்களையும் நடத்துவது சட்டவிரோதம் என்பதை பேச மறுக்கின்றனர்.

மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புபடுபவர்கள் ஆசிரியர்களே இவர்களே களப்பணியாளர்கள். இவர்களின் உளவியல் என்பது மிகமுக்கியமானது. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து தீர்மானங்களை எடுப்பவர்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக்கூடிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். மாறாக தமது அதிகாரத் திணிப்பினூடாக ஆசிரியர்களையும், மாணவர்களையும் விரக்தி நிலைக்குக் கொண்டு செல்லும் முடிவுகளை எடுக்கக்கூடாது என்றுள்ளது.

Related posts: