புகையிலைச் செய்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை!

Sunday, December 24th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில்  புகையிலை பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் மற்றும் உதவிகள் வழங்கும் வகையில் விவசாயிகளிடமிருந்து தகவல்கள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடப்பாண்டில் 741 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆயிரத்து 956 விவசாயிகள் புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 104.69 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 331 விவசாயிகளும் வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 92.85 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 231 விவசாயிகளும் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 11.5 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 40 விவசாயிகளும் சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் 25.1ஹெக்டேயர் நிலப்பரப்பில் 64 விவசாயிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 2.675 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 16 விவசாயிகளும் உடுவில் பிரதேச செயலகப் 102.5 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 420 விவசாயிகளும் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 3.75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 50 விவசாயிகளும் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 35.7 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 271 விவசாயிகளும் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 299.275 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 188 விவசாயிகளும் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 39.425 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 232 விவசாயிகளும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 24.15 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 113 விவசாயிகளும் புகையிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதே வேளை நெடுந்தீவு காரைநகர் யாழ்ப்பாணம் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த முறை புகையிலை பயிரிடப்படவில்லை.

புகையிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புகையிலை விவசாயத்தை விட்டு மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுப் பயிர்ச் செய்கைக்காக அதிகளவில் மிளகாய் செய்கையை விரும்புவதுடன் வெங்காயம் கரட் உருளைக்கிழங்கு பூசணி அவரை திணை போன்ற பயிர்களை செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய உதிரிப்பாகங்கள் போன்றவற்றையும் கோரியுள்ளனர் என்றுள்ளது.

Related posts: