மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை – மின்சார தொழிற்சங்கம் தெரிவிப்பு!

Sunday, March 12th, 2023

மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என மின்சார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இறுதி சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக மின்சார சபையில் மேற்கொள்ளக் கூடிய மறுசீரமைப்பை அடுத்த வாரத்திற்குள் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் தகவல் வெளியாகிருந்தது.

அத்துடன் கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதும் நிதி நிர்வாகம் தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதும் அதன் முதற்கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபை மறுசீரமைக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால், மின்சார சபையை தனியார் தரப்பினருக்கு வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் தங்களுக்கு எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லை எனவும் மின்சார சபையை விற்பனை செய்வதற்கு முயற்சித்தால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: