மருத்துவக் கழிவுகளை ஏற்றிச் செல்ல பழைய வாகனங்களைப் பயன்படுத்தவும் – வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Friday, November 10th, 2017

வடக்கு மாகாணத்தில் மருத்துவமனைகளின் மருத்துவக்கழிவுகளை  ஏற்றிச் சென்று அகற்ற நோயாளர் காவு வண்டிகளைப் பயன்படுத்தாது பழைய வாகனங்களைப் பயன்படுத்துமாறு வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சுகாதார அமைச்சு சார்ந்த கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்குமாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் அநேகமான சந்தர்ப்பங்களில் மருத்துவக்கழிவுகளை அகற்ற நோயாளர் காவு வண்டிகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நோயாளர் காவு வண்டிச்சேவை பாதிக்கப்படுவதுடன் வண்டியின் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது. மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி அதனை சுகாதார முறையில் வைத்திருப்பதற்காக தேவை கருதி நோயாளர் காவு வண்டியில் அதனை ஏற்றிச் சென்று அகற்றுகின்றனர். இதனால் காவு வண்டிச் சேவை பல்வேறு இன்னல்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

நோயாளர் காவுவண்டி மிக குறைவாக உள்ள மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு வண்டிகளைப் பயன்படுத்தும் போது நோயாளர்களை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய தேவை அல்லது நோயாளர் ஒருவரை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது சிக்கல் உண்டாகின்றது. அத்துடன் மருத்துவ கழிவு என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. நோயாளர்களை ஏற்றுவதற்குரிய வண்டிகள் தூய்மையாக இருப்பது அவசியம் என்றார்.

Related posts: