சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை – ஆனால் பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, October 2nd, 2023

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை அனைவரும் முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை ஆராய வேண்டும்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக சமூக வலைத்தளங்களில் ஒருவரின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரும் செயற்பட முடியாது.

பிறருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது என்பதற்காகவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்துவேன். சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாட்டு மக்களும் உள்ளார்கள்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் தற்போது விமர்சிக்கப்படுகிறது. சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரிக்க முடியாது. ஆகவே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சகல தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: