மக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் – கட்டளைத் தளபதி!

Monday, April 16th, 2018

போர் அற்ற இன்றைய அமைதிச் சூழலில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்கின்ற இலட்சியத்தை நோக்கி இராணுவத்தினர் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றனர்.

போராலும், போரின் எச்சங்களாலும் காயப்பட்டு இருக்கின்ற மக்களின் மனங்களை ஒரு இரவுக்குள் ஆற்றுப்படுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். தூர நோக்கு, தீர்க்கதரிசனம், இதய சுத்தி ஆகியவற்றுடன் மக்களுக்கான எமது சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாண்டு வருகின்றோம். சித்திரைப் புத்தாண்டுப் பரிசாக பெருந்தொகை நிலத்தை மக்களுக்கு விடுவித்துக் கொடுத்துள்ளோம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடகக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

துரதிர்ஸ்டவசமாக பிரிவினைவாதம், போர் ஆகியன தமிழ், சிங்கள மக்களைப் பிரித்து விட்ட போதிலும் போருக்குப் பிந்திய அமைதிச் சூழல் மீண்டும் இரு இனங்களுக்கும் ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம், சாந்தி, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுடன் வாழக்கூடிய இயல்பு நிலைமையை மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுடன் சேர்ந்து தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் நாமும் பேருவகை அடைகின்றோம்.

மீண்டும் ஒரு போர் வரக்கூடாது என்று எல்லோரையும் போலவே நாமும் பெருவிருப்பம் கொண்டிருக்கின்றோம். அதற்காகவே எமது உடல், உழைப்பு, உயிர் ஆகியவற்றை அர்ப்பணித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மீண்டும் ஓர் போர் வேண்டாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை எமது உறவுகளுக்கும், நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்குக் கற்பித்துக் கொடுத்து அவர்களை நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன் கொடுக்கின்ற நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள் என்று இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி என்கின்ற விதத்தில் இத்தருணத்தில் விநயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

30 ஆண்டு கால கசப்பான போருக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ், சிங்கள மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இனத்தால் வேறுபட்டவர்களாகச் சித்திரிக்கப்பட்டு வருகின்றபோதிலும் மொழி, சமயம், கலாசாரம், பண்பாடு, விருந்தோம்பல், பாரம்பரியம், நாகரிகம் என்று வாழ்க்கை முறைமையின் ஒவ்வொரு அம்சத்திலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒன்றுபட்ட தன்மைகள் நின்று நிலவி காணப்படுகின்றன. இதன் அடையாளமாகவே தமிழ் சிங்களப் புத்தாண்டு இரு இன மக்களாலும் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற உறவுப் பாலமாக இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தலைமையகம் செயற்படும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன் என்றார்.

Related posts: