வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!

Thursday, June 8th, 2023

இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின்  மூலம் தெரியவந்துள்ளது.

2019 முதல் 2023 ஆம் ஆண்டிற்குள் நான்கு முதல் ஏழு மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இந்த காலப்பகுதிக்குள் 31 வீதமாக அதிகரித்துள்ளது என்பதும் இந்த கருத்துக்கணிப்பின்  மூலம் தெரியவந்துள்ளது.

லிர்னே ஏசியா என்ற பிராந்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்  போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

ஆய்விற்குட்படுத்தப்பட்ட 10,000 பேரில் 33 வீதமானவர்கள் தாங்கள் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர்  உணவை தவிர்த்துள்ளதாகவும் 47 வீதமானவர்கள்  உணவை குறைத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

27 வீதமானவர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவை வழங்குவதற்காக தங்கள் உணவை குறைத்துக்கொண்டுள்ளனர்,

இந்த கருத்துக்கணிப்பை லிர்னே ஏசியா 2022 ஒக்டோபர் பத்து முதல் 2023 மே 12 வரை மேற்கொண்டுள்ளது.

2019 ம் ஆண்டு தோட்டதொழிலாளர்கள் மத்தியில் வறுமை 31வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள லிர்னே ஏசியாவின் ஆராய்ச்சியாளர் தாரகஅமரசிங்க 2023 இல் இது மோசமடைந்துள்ளது தோட்டத்தொழிலாளர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2019 முதல் 2023 ம் ஆண்டிற்குள் இலங்கையின் கிராமப்பகுதிகளில் வறுமை 15லிருந்து 32 வீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் வறுமை ஆறு வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரித்துள்ளது.

32 வீதமான குடும்பங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை விற்றுள்ளன, 50 வீதமான குடும்பங்கள் தங்கள் சேமிப்புகளை செலவிட்டுள்ளன.

இலங்கையில் ஆறு வீதமானவர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்பதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது,இதன் மூலம் 203000 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பெற்றோர்கள் தங்களிடம் பிள்ளைகளிற்கு கொப்பிகள் வாங்குவதற்கான பணம் இல்லை என தெரிவித்துள்ளதுடன் பழைய கொப்பிகளில் எழுதப்படாத பக்கங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: