மக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி

Wednesday, December 12th, 2018

ஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது எவ்வாறு தனது நிதிநிலை அறிக்கையை காட்ட முற்படுகின்றதோ அவ்வாறான ஒரு நிதியிடலையே இந்த மாநகரும் இன்று முன்வைத்துள்ளது.

இதனால் இந்த மாநகரும் தனது ஆளுமையில் வீழ்ச்சி கண்ட சபையாக மாறியுள்ளது. அந்தவகையில் இந்தப் பாதீடு மக்களுக்கு எந்தவகையிலும் நன்மையளிக்கமாட்டாது.  எனவே இந்த பாதீடு மக்களின் நலன்களை முன்னிறுத்தாது காணப்படுவதால் அதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் யாழ் மாநகரசபையால் முன்வைக்கப்பட்ட பாதீடு தோல்விகண்டதன் பின்னர் மீண்டும் இன்று தனது பாதீட்டை முதல்வர் ஆர்னோல் சபையில் முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.

இந்த பாதீடு தொடர்பில் உரையாற்றுகையிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான றெமிடியஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சுத்தமான பசுமையான நகரமாக யாழ் மாநகரை ஆக்குவோம் என்று கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இந்த யாழ் மாநகரசபை ஆட்சியாளர்கள் அதன் முதலாவது பாதீட்டில் எந்தவொரு மக்கள் நலன்களையோ அன்றி நகரின் அபிவிருத்தியிலோ அக்கறை கொள்ளாது தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கேற்ப முன்மொழியப்பட்டுள்ளது இந்த பாதீடு.

இந்த பாதீட்டில் மாநகரில் உள்ள நிதி மூலதனங்களை தவிர்த்து மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் நிதி மூலதனங்கள் ஏதாவது புதிதாக உள்வாங்கப்படவும் இல்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எமது கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. அதாவது மக்களின் நலன்களை முன்னெடுத்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளூடாக சேவை செய்யவதற்கு ஆட்சி அதிகாரங்களை அமைக்க யார் முற்படுகின்றார்களோ அவர்களுக்கு ஆட்சி அமைக்க நாம் ஒத்துழைப்போம் என்றும் அவ்வாறு அவர்கள் மக்களின் நலனிலிருந்து செயற்படாத பட்சத்தில் அதை நாம் எதிர்ப்போம் என்றும் கூறியிருந்தோம்.

எமது கட்சியின் நிலைப்பாட்டின் பிரகாரம் இந்த மாநகரின் புதிய பாதீடு யாழ் மாநகரின் மக்களது தேவைகள் சார்ந்து எந்தவகையிலும் அமையாதுள்ளதுடன் அத்தியாவசிய தேவையான குடிநீருக்கான கட்டணம் மக்களை பெரும் சங்கடங்களுக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது வட்டாரங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. எனவே இந்த பாதீடு மக்களின் நலனில் எந்தவகையிலம் அக்கறை செலுத்தாத பாதீடாக காணப்படுவதால் இதை நாம் நிராகரிக்கின்றோம் என்றார்.

Related posts: