போர் வெற்றி என்பது தனிநபருக்குரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா சுட்டிக்காட்டு!

புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உலக நாடுகள் உதவின. ஏன், ஒசாமா பின் லேடன்கூட ஏதோவொரு விதத்தில் உதவினார் என்றே கூறவேண்டும். அத்துடன் போர் முடிவு என்பது கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி, மாறாக தனிநபரால் அது சாத்தியப்படவில்லை.” என உள்நாட்டு போர் ஆரம்பம்முதல் அது மௌனிக்கப்படும்வரை போர் களத்தில் இருந்தார் எனக் கூறப்படும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்..
இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும்போதே அவர், இந்த தகவலையும் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2010 ஆம் ஆண்டில் சலே என்பவருடன் இணைந்து பொனிபஸ் பெரேரா என்பவர் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச்செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தகவலை நிராகரிக்கின்றேன். எவ்வித அடிப்படையும் இன்றி, பொறுப்பற்ற விதத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தே இது.
2009 இல் போர் முடிவடைந்த பின்னர், 2010 இல் நாட்டில் எங்கு குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றது? 2010 இல் நான் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதியாக செயற்பட்டிருந்தேன். தேசிய பாதுகாப்பு தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்ள 2011 இல் சீனாவுக்கு சென்றுவிட்டேன்.
இக்காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு இடத்திலும் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெறவில்லை. இதன்மூலம் பொன்சேகாவின் கூற்று போலியானது என்பது நிரூபனமாகின்றது. இராணுவத்தில் இருக்கும்போது என்னுடன் இருந்த முரண்பாடுகளால் அவர் இப்படியானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம்.
1981 இல் நான் இராணுவத்தில் இணைந்தேன், 83 இல் இருந்துதான் போர் ஆரம்பமானது. அன்றுமுதல் 2009வரை போர் களத்தில் இருந்தவன் நான். சிங்க படையணியில் முன்கள சிப்பாயாக இருந்தேன். யாழ். கோட்டை மீட்பு, யாழ். மீட்பு, வன்னி மீட்பு, கிழக்கு மீட்பு என முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தேன்.
போரை தனித்து முடிவுக்கு கொண்டுவந்ததாக பொன்சேகா கருதுகின்றார் போலும், போர் என்பது கூட்டு முயற்சியாகும்.
சிறப்புரிமைக்குள் ஒளிந்துகொண்டு நாடாளுமன்றத்துக்குள் இருந்துகொண்டு இவ்வாறு கருத்து வெளியிடாமல் வெளியில் வந்து வெளியிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககூடியதாக இருக்கும்.
போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். குறிப்பாக போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது, கூட்டு முயற்சியின் அவசியத்துவத்தை அதில் சுட்டிக்காட்டி இருந்தேன். இராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது.
கடற்படை இருக்க வேண்டும், விமானப்படை இருக்க வேண்டும், எமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது, பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைத்தது, சிறந்த அரசியல் தலைமைத்துவமும் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள், தாதிமார் சிகிச்சையளித்தனர், மக்கள் வரி செலுத்தினர், தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர்.
அமெரிக்கா எமக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கின. இந்தியா புலனாய்வு தகவல்கள் உள்ளிட்ட சிற்சில உதவிகளை வழங்கியது. அதேபோல தற்போதைய ஜனாதிபதி, புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை பிரித்தெடுத்து அவ்வமைப்பை பலவீனப்படுத்தினார்.இதுதான் கூட்டு முயற்சியாகும்.
பின்லேடன்கூட உதவினார் என்றே சொல்ல வேண்டும், அவர் அமெரிக்காமீது தாக்குதல் நடத்தியதால், பயங்கரவாதம் குறித்தான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது ,நிதி முடக்கம் உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போர் வெற்றி என்பது தனிநபருக்குரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. போர் வெற்றி என்பது உயிர்தியாகம் செய்த, அங்கவீனம் அடைந்த படையினருக்குதான் சென்றடைய வேண்டும்.” – என்றார்.
000
Related posts:
|
|