போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஆதரவு வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Tuesday, July 28th, 2020

போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, பொது மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

குருநாகலுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு, பொது மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மக்களுடன் உரையாடிய அவர், நாட்டில் உள்ள அனைத்து குளங்களையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்த இந்தத் திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மட்பாண்ட கைத்தொழில்சார் சுயதொழிலில் ஈடுபடுகின்ற சிலர், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி, இந்த கைத்தொழிலாளர்கள் சுதந்திரமாக வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு இடமளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அத்தோடு, பித்தளை மற்றும் ஏனைய சம்பிரதாய கைத்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கடன்களை பெற்றுக்கொள்ளும்போது தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அதேநேரம், போதைப் பொருளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்தக் கூட்டங்களுக்கு வருகைத் தந்த மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், பிரதேசங்களில் நடைபெறும் போதைப்பொருள் வியாபாரங்கள் தொடர்பாக பெயர் குறிப்பிடாது ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும், இதற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: