போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அதிரடியான திட்டங்கள் தயார் – வடக்கு ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, July 11th, 2023

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வூட்டலை ஏற்படுத்துவதற்கான இரு வேறு செயற்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் .சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனையானது உலகளாவிய பிரச்சினையாகும். எமது பகுதியில் தற்பொழுது தான் அதன் பாதிப்பு அதிகமாக உணரப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதென்பது எந்த நாட்டிலும் சாத்தியமற்ற ஒன்று. ஆகவே, போதைப்பொருளை ஒழிப்பதை விடவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவரை அதிலிருந்து மீட்டெடுத்தலும் மற்றும் இளையோர் போதைப்பொருளை இனிமேல் நாடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதுமே இப்போது எம் முன்னுள்ள வழிகள்.

போதைப்பொருளை வாங்க, நுகர எவரும் இல்லையாயின் போதைப்பொருள் விற்பனையும் தானாகக் குறைந்து இல்லாமல் போய்விடும்.

எனவே, போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வூட்டலை பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் ஏற்படுத்துவதற்கான இரு வேறு செயற்திட்டங்கள் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து உரிய அதிகாரிகள் வகுத்தும் பரிசீலித்தும் வருகின்றனர்.

ஆகவே, விரைவில் இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்தினை வடக்கில் தீவிரமாக முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: