பொலிஸ் துணையுடன் வெட்டப்படுகிறது மாடுகள் : வேலணை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்!

Thursday, March 15th, 2018

வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரின் துணையுடனேயே மாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுகின்றன என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

வேலணை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்..

அவர்கள் தெரிவித்ததாவது:

எமது பிரதேசங்களில் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் கட்டாக்காலி மாடுகளை நாளாந்தம் கடத்திச் செல்கின்றனர். கடத்தலில் ஈடுபடுபவர்கள் பொலிஸாரின் துணையுடன் இயங்குவதால் எமக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.

எமது வாழ்வாதாரத்துக்கு வழங்கப்படும் மாடுகள் திருட்டுப் போவதால் எமது வாழ்வாதாரம் அழிகின்றது. எமது மக்கள் வறுமைக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இங்குள்ள கட்டாக்காலி மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்கி வெளியிடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

இது தொடர்பாக பலதடவை முறைப்பாடுகளை செய்தும் பலரிடம் கோரிக்கை விடுத்தும் முடிவு கிடைக்கவில்லை. எமது பகுதிகளில் உள்ள கால்நடைகளைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts: