பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தற்போதுள்ள நிலையில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக நாளொன்றுக்கு 440 இலட்சம் ரூபா செலவாகின்றன.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை முடக்கி எவ்வாறு வருமானத்தை பெற்றுக்கொள்வது என்ற கேள்வியை நாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே எமது பிரதான வேலைத்திட்டமாகும். தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் அதேபோல் மக்களை சுகாதார வழிமுறைகளுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கின்றோம்.

இதனால் இறப்பு வீதங்களை குறைக்க முடியும்.  எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் 63 வீதமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தடுப்பூசி நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளோம். ஆகவே உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிகராக நாமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: