‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!

Wednesday, November 10th, 2021

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராசா ஆகியோர் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செயலணியின் அங்கத்துவ அமைப்பு மற்றும் விடய நிர்ணயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பிரதிநிதித்துவங்களை கருத்திற்கொண்டு இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாகக் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் வண்ணம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணிக்கு முன்னதாக 13 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் ஆகியோர் பதவி விலகியிருந்தனர்.

இந்தநிலையில், புதிதாக 3 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயலணியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான சட்டவரைவு ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பு இந்தச் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: