இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு – கல்வித்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உலக வங்கியின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, September 19th, 2023

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் கல்வித்துறையை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு உலக வங்கி முழுமையான ஆதரவு வழங்கும் என உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தற்போது ஆரம்பித்துள்ள செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென உலக வங்கியின் தலைவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக, சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களை முழுமையாக அமுல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்து பாரம்பரிய ஏற்றுமதி பயிர்களுடன் இலங்கையின் விவசாயத்துறையின் நவீனமயமாக்கல் செயல்முறையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இந்திய – இலங்கை தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பலனாக, 4 புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் அதற்கு மேலதிகமாக காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உத்தேச காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவதற்கு உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியை எதிர்பாரத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில், காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலமான மின்உற்பத்தி என்பவற்றை ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல், உள்ளிட்ட விடயங்களுக்காக 4 புதிய சட்டமூலங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: