ஆறு பில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட லங்கா சதொச நிறுவனம் – கோப் குழுவில் அம்பலமானது உண்மை!

Saturday, June 24th, 2023

லங்கா சதொச நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டில் ஆறு பில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி மோசடியொன்றில் ஈடுபட்டுள்ளது என கோப் குழுவில் அம்பலமாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விபரங்கள் பொதுஜன பெரமுணவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளும் ஒரு குறிப்பிட்ட பிரிவு அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களின் வரிப்பணத்தை மிகவும் ஊழல் மற்றும் நேர்மையற்ற முறையில் அழித்துள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தனியான நாளை ஒதுக்குமாறு கோப் குழுவிடம் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனம் ஆறு பில்லியன் ரூபாய் செலவில் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்திருந்தது.

அத்துடன்  குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதனை மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றதாக தெரிவித்து, கால்நடை தீவனமாக மிகக் குறைந்த விலைக்கு புறக்கோட்டை சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய சதொச நிறுவன உயர் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் இருந்து புதிய அரிசி கொள்வனவு செய்யும் சாக்கில் தாங்கள் முன்பு விற்ற அதே அரிசியை பெருந்தொகைப் பணம் செலவழித்து, மீண்டும் சதொசவுக்கே கொள்வனவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: