யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று – அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Friday, May 14th, 2021

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என யாழ். மாவட்ட கொரோனா செயலணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த செயலணி மேலும் தெரிவித்துள்ளதாவது –

யாழ். மாவட்டத்தில் கோவிட் நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் நாடு பூராகவும் நேற்று நள்ளிரவுமுதல் 17ஆம் திகதி அதிகாலை வரை பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் ஒழிப்பு மத்திய நிலையத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வீடுகளில் இருந்து ஒருவர் வெளியில் செல்லலாம் என மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படும். உணவுப்பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் விவசாய மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் அடங்கலான வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே எவரும் பயணிக்க வேண்டியிருந்தால் வழமைபோன்று ஊரடங்கு நேர நடைமுறை போன்று அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று தங்களுடைய அனுமதியினைப் பெற்று பயணிக்க முடியும்.

அதேவேளை அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையோர் பயணிக்க அனுமதிக்கப்படாது. அதேவேளையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினையும் அரசாங்கத்தினுடைய சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி தற்போது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வெளிமாகாணங்களுக்கான பயணங்களில் ஈடுபடுவோர் தமது வாகன இலக்கம் சாரதி, நடத்துனர் பெயர் விவரங்கள் அடங்கலான தகவல்களை பிரதேச செயலர் ஊடாக உரிய முறையில் மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பித்தால் அதனை மின்னஞ்சல் ஊடாக மாகாணங்களுக்கு இடையில் உள்ள காவலரண்களுக்கு அந்த மின்னஞ்சல்களை அனுப்பி பயணத்தினை இலகுவாக்க கூடியதாக இருக்கும்.

அத்துடன் விவசாய மீன்பிடி உற்பத்தி பொருட் போக்குவரத்தில் ஈடுபடுவோர் குறித்த திணைக்களங்களின் அனுமதியினைப் பெற்று உரியவாறு விண்ணப்பிக்குமிடத்து அதற்குரிய அனுமதிகளும் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: