ஒருங்கிணைப்புக் குழு தலைமைப்பதவி விவகாரம் : ஈ.பி.டி.பியிடம் திண்டாடிய சரவணபவன் எம்.பி!

Wednesday, May 15th, 2019

ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைமைப் பதவியை வகிப்பதற்கான தகுதி நிலை தொடர்பில்  சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஸ்ணனால் கேள்வியெழுப்பப்பட்டதை அடுத்து சபையில் பெரும் குழப்பநிலை உருவாகியது.

நேற்றையதினம் சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சங்கானை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் பிரதேச செயலர் பிறேமினி பொன்னம்பலம் ஆகியோர் தலைமையில் கூடியது.

இதன்போது  சிவகுரு பாலகிருஸ்ணனின் கேள்விக்கு, குறித்த பதவி நிலைக்கான சுற்றுநிருபம் தொடர்பில் தனக்கு இதுவரை எதுவும் தெரியாதெனவும் தான் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதேச செயலரும் தனக்கு இது தொடர்பான அறிவித்தல் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதனால் சுற்று நிருபத்தின் பிரகாரம் இது சட்டவிரோதமான தலைமையை கொண்டமைந்துள்ளது. ஆகவே இது சட்டவிரோதமான கூட்டம். இதில் எடுக்கப்படும் தீர்மானங்களும் சட்டத்திற்கு புறம்பானவை என சிவகுரு பாலகிருஸ்ணனால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தலைமை பொறுப்பை வகிக்கும் தகைமை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தொடர்பிலும் சிவகுரு பாலகிருஸ்னண் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 13.02.2019 ஆம் திகதியையும் 4/2019 ஆம் இலக்கத்தையும் கொண்ட சுற்றறிக்கையின் பிரகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை தலைவராகவும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவானது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தலைவராகவும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும் கொண்டிருக்கவேண்டும் என கூறுகின்றது.

அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தான் குறித்த மாவட்டம் மற்றும் அந்த மாவட்டத்திலுள்ள பிரதேசங்களினதும் அபிவிருத்தியை ஒருங்கிணைப்புச் செய்யும் அதிகாரம் கொண்டதாகவும்  தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்ற மற்றும் மேற்பார்வை செய்கின்ற பிரதான குழுக்களாகவும் அமைகின்றன இது தொடர்பில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார் எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களது கேள்விக்கு பதிலளித்த துறைசார் அமைச்சர், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் குறித்த சுற்றறிக்கை உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரின்  அபிவிருத்தி – 2019 எனும் இலக்கத்தையும் 13.02.2019ஆம் திகதியையும் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்படுவதற்குரிய சுற்றறிக்கை இல. 4/2019ன் பிரகாரம் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உபதலைவர்கள் நியமிக்கப்படும் விதிமுறைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்  

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களாக செயற்படுகின்றவர்கள் தொடர்பில் சுற்றறிக்கையில் தெளிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கை இல. 4/2019ன் பிரகாரம் ஏதேனும் காரணத்தினால் தலைவருக்கோ அல்லது உப தலைவருக்கோ பங்குபற்ற முடியாமற்போயின், அதன் தலைமைத்துவத்தை வகிப்பதற்கு பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் தற்காலிகமாக தலைவர் ஒருவரை நியமித்து, அன்றைய நாளுக்கான கடமைகளை மேற்கொள்வதற்கு சுற்றறிக்கை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில், அந்த மாகாணங்களில் அமைந்துள்ள பிரதேச அபிவிருத்தி குழுக்களின் உப தலைவர்களை நியமிப்பது தொடர்பில் சுற்றறிக்கை மூலம் தெளிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்காக அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் ஏனைய கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் போல் செல்லுபடியாகும். பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவின்மை காணப்படின் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரினால் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரின் ஆலோசனைகளை முன் கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும். 

மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம் அந்த தீர்மானங்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் செவிசாய்க்கவேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்துள்ள விடயங்கள் தொடர்பில் சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த விடயங்களைத்தான் என்னால் தெளிவுபடுத்த இயலுமானதாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்னும் இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடையவில்லை.  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனது ஞாபகத்தின்படி  அத்தகைய சந்தர்ப்பத்தில் மாவட்ட செயலாளருக்கு அல்லது பிரதேச செயலாளருக்கு பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் வந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளால் சபையை நடத்த இயலும். ஆனாலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அந்த நியமனங்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.   குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் செயற்படும்விதம் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கூட்டம் கூடியபோது கூட்டத்திற்குச் சமுகமளித்தவர்களில் மக்கள் பிரதிநிதி ஒருவரின் பெயரை பிரேரணை ஒன்று நிறைவேற்றுவதன் மூலம் சபையின் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

அப்படியான ஒரு நிலைமை இருப்பின், நான் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன்.  2018.12.23ம் திகதி புதிய அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மற்றும் பழைய அரசியலமைப்பின் பிரகாரம் மற்றும் தாபனக் கோவையின் பிரகாரம் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் சபையின் எதிர்ப்பு ஏற்படாத பட்சத்தில், அதற்கான எதிர்ப்பு இல்லாவிடின், வடக்கு கிழக்கு பகுதிகளில் அனைத்து விடயங்களும் சட்ட ரீதியானது என நான் நினைக்கிறேன். நீங்கள் கூறும் விடயம் தொடர்பில் நான் ஆராய்ந்து பார்க்கிறேன். அடுத்த அரச அதிபர் மாநாட்டில் கலந்தாலோசித்த பின் இறுதித் தீர்மானத்தை அறியத் தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சுற்று நிருபம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென சரவணபவன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்று பிரதேச செயலரிடம் இது தொடர்பில் பாலகிருஸ்ணன் கேள்வி எழுப்பியபோது அவரும் இவ்வாறான ஒரு சுற்று நிருபம் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் குறித்த சுற்றுநிருபத்தின் பின்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் தலைமைகளும் அவர்கள் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சட்டமுரணானதாக அமைகின்றது. அதுமட்டுமல்லாது அரச அதிகாரிகளும் இது தொடர்பில் தமக்கு சுற்றறிக்கை கிடைக்கவில்லை என கூறுகின்றனர் அவ்வாறாயின் உண்மையில் இது அரச அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லையா? அல்லது அவர்கள் இது தொடர்பில் அசமந்தமாக இருக்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. அதுமட்டுமல்லாது குறித்த கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த சரவணபவன் எம்.பி. இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குறித்த விடயம் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. கேள்வி எழுப்பியதை அடுத்து சபையில் விவாதங்களேற்பட்டதை அவர் அறிந்திருக்கவில்லையா? அல்லது சரவணபவன் எம்.பி சபையில் தூக்கத்திலிருந்தாரா? பதவி இருந்தால் போதும் மற்றைய எதுவும் அவர்களுக்கு தேவையற்றது என்பதை இச்செயற்பாடு எடுத்துக் காட்டுகின்றது.

Related posts: