பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர் – நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் மேற்படி பொருளாதார வேலைத்திட்டத்தின் தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்றும் அதனையடுத்து அதனைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள குறுகிய கால மற்றும் நீண்டகால இலக்கு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அந்த விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார் வெல்கம, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அலிசப்ரி, அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, பேராசிரியர் சரித்த ஹேரத் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: