நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!

Friday, September 28th, 2018

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பார்க்காமல் இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் இலங்கையர் என்ற வகையில் எந்தவொரு பாகுபாடுகளுமின்றி கல்விச் சேவையாற்றி வருகின்றோம். ஆசிரியர் நியமனம், பௌதிக வளங்கள், கட்டட வளங்கள் மட்டுமல்ல முஸ்லிம் மாணவிகளின் பர்தா விடயத்தில் அவர்களுடைய சமய கலாசார உரிமைக்கு பாதுகாப்பளித்து கல்வி கற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மௌலவி சமய ஆசிரியர்கள் நியமன வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கூட வெகு விரைவில் நியமனம் வழங்கவுள்ளோம் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குருநாகல் பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரியில் 2 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத் திறப்பு விழா அதிபர் ஏ.எஸ்.எம்.இர்~லீட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேவையைக் கருத்திற்கொண்டு எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி பாடசாலைக்குத் தேவையான உபகரணங்கள், கட்டட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

கடந்த காலத்தில் பாடசாலைகளில் பர்தா அணிவதற்கு இடையூறு விளைவித்தார்கள். உங்களை சமய கலாசார உரிமையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். கொழும்பை எடுத்துக்கொண்டால் முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. மத்திய கொழும்பில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஒரு புதிய பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேபோன்று பம்பலப்பிட்டியிலும் பாடசாலை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வத்தளையிலும் தமிழ் மொழி மூலப் பாடசாலை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பிரதமரின் பணிப்புரையில் இன்னும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு கட்டட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டடங்களும் வழங்கியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related posts: