பொருளாதார நிபுணர்கள் 72 ஆண்டுகளாக நாட்டின் நாணயத்தை அழித்துவருகின்றனர் – பதவி விலகிய லிற்றோ நிறுவன தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

Saturday, April 16th, 2022

மத்திய வங்கி அதிகாரிகளும் நாட்டின் பொருளாதார நிபுணர்களும் 72 ஆண்டுகளாக நாணயத்தை அழித்துள்ளனர் என்று தமது பதவியை விட்டு விலகிய இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜெயசிங்க, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்

தமது பதவி விலகல் கடிதத்தில் அவர் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமைச்சர்களும் அரசாங்க அதிகாரிகளும் லிட்ரோவின் தவறுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தமது தீர்மானங்களை ஆதரவளிக்கவில்லை என்று ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை விட நிலைமையை மோசமாக்கவே முயற்சிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

இந்தநிலையில் பலகோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய இந்த சர்வதேச மாஃபியாக்களை தடுக்க தாம், தம்மால் முடிந்தவரை முயற்சித்ததாக ஜெயசிங்க கடிதத்தில் குறிப்பி;ட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை நிறுவனங்களுக்குள் கலந்துரையாடுவதன் மூலம் மாத்திரம் தீர்க்க முடியாது எனவும் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, எரிவாயு இறக்குமதியில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு, அரச மற்றும் தனியார் வங்கிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான கணிப்புகள் ஆகியன நிறுவனங்களுக்குள்ளேயே தீர்க்க முடியாத பிரச்சினைகளாகும் என ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நாணயக் கொள்கை மற்றும் பணத்தை கையாள்வதற்குப் பொறுப்பான அதிகாரிகள், போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல், இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்க்காமல், நாட்டிலுள்ள பொது மக்களை கஸ்டப்படுத்துவதைப் பார்ப்பது ஒரு வெறுக்கத்தக்க அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: