பொதுமக்கள் கவனக்குறைவாகச் செயற்பட்டால் கொரோனா நிலை மேலும் மோசமடையும் – பாடசாலைகளை மீண்டும் மூடவும் நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, November 25th, 2021

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டது நல்ல விடயம் என்ற போதிலும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் தொடர்ச்சியாக 700 இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை

பொதுமக்கள் தொடர்ந்தும் கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற விதத்திலும் செயற்பட்டால் கொரோனா நிலைமை மோசமடையும். இது நாட்டை முடக்குவதற்கு வழிவகுப்பதுடன், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

அந்தவகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நடந்து கொள்வது மக்களின் பொறுப்பாகும் என தலைமை தொற்று நோயியல் நிபுணரான வைத்தியர் சமித்த கினிகே ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் மற்றுமொரு முடக்கம் பற்றிய கூற்றுகள் உண்மையா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது,  அது சாத்தியம் என்றும், இறப்பு மற்றும் தொற்றாளர்களின் தற்போதைய அதிகரிப்பு தொடர்ந்தால், அதிகாரிகள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும். தொடர்ந்து புதிய சுகாதார வழிகாட்டல்களைப் புதுப்பித்து வருவதாகவும் சிறந்த நடைமுறைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு ஆதரவை வழங்கி, கொரோனா தொற்றுப் பரவலைத் தணிக்க உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நேற்றையதினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

குறித்த சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த த.தே.மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது குறித்த உறுப்பினருக்கு நேற்றையதினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சபை அமர்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்ட உறுப்பினர் உள்ளிட்ட நேற்றைய சபை அமர்வில் பங்கேற்ற 14 உறுப்பினர்கள் மற்றும் சாரதி ஒருவர் என 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சபை அமர்வில் பங்கேற்ற நகரசபை உத்தியோகத்தர்கள் மூவர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடவில்லை என அறியமுடிகிறது.

இது குறித்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உத்தியோகத்தரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

000

Related posts: