பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை – பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எச்சரிக்கை!

Friday, December 3rd, 2021

மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பேருந்துகள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இந்த பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்  எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேருந்துகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் முறையற்ற முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதனால் ஏற்பட்டதே தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் தரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பல சோதனைகளின் பின்னரே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதால் தரமற்றதாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் வலியுறுத்துகிறார்.

பரிந்துரைக்கப்பட்ட எரிபொருளைத் தவிர மற்ற வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராய நாடளாவிய ரீதியில் மூன்று விரைவு பரிசோதனைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது மண்ணெண்ணெய் விற்பனை மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நாளாந்தம் 23 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மண்ணெண்ணெய் தேவை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: