பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத் தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டது – மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023

“வங்கிக் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களினால் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இருப்பினும் பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத் தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தினோம். அடுத்ததாக அனைத்து வங்கி கணக்குகளையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தோம். வங்கி கட்டமைப்பு தொடர்பில் ஏற்படுத்தப்படும் அநாவசியமான அச்சத்தினால் ஓய்வூதிய நிதியங்கள் போன்ற பெரும் நிதியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.  அதனால் நியாயமானதொரு தீர்வினையே நாங்கள் முன்வைத்துள்ளோம்.

வங்கிகள் ஏற்கனவே 50% சதவீத வரியை செலுத்தி கடன் சலுகைகளையும் வழங்குகின்ற அதேநேரம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. அதன் பலனாகவே வங்கி கட்டமைப்புக்கள், வைப்புக் கணக்குகள் ஆகியவற்றைப் பேணும் நிறுவனங்களின் பிணைமுறிகளை மறுசீரமைப்புச் செய்யாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி கடன் பத்திரங்களுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. திறைசேரி பத்திரங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். அதேபோல் ஓய்வூதிய நிதியம்  தொடர்பிலான நியாயமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 

அதனால் வருடாந்தம் அவற்றுக்கான 9% சதவீத வட்டி வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்த முடியும்.  தற்போதைய சேமிப்புத் தொகையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது. அத்தோடு திறைசேரி பிணைமுறிகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய பிணைமுறிகள் பரிமாற்றப்படும். இந்தப் பணிகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை  ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதோடு, அன்றிலிருந்து தீர்மானிக்கப்பட்ட இறுதி தினமும் அறிவிக்கப்படும். 

ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் (EPF, ETF) ஆகியவற்றின் எந்தவொரு பிணைமுறியினையும் பரிமாற்றிக்கொள்ள முடியும். தனியார் துறையிலும் பல்வேறு ஓய்வூதிய நிதியங்கள் காணப்படுகின்றன. அவையும் மறுசீரமைக்கப்படும். வங்கித்துறையினர் 50% வரியை திறைசேரிக்கு செலுத்தும் போது அதற்கு இணையாக ஓய்வூதிய நிதியங்கள் 14% வரியை மாத்திரமே செலுத்துகின்றன. மேற்படி பிணைமுறி பரிமாற்றத்தில் அவர்கள் பங்கெடுக்கும்  பட்சத்தில் அவர்களுக்கு 14% வரியை செலுத்துவதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும்.  அவ்வாறு இல்லாவிட்டால் கூடிய வரி விகிதங்களுக்கு செல்ல முடியும்.  அது அவர்களுக்கு பலனற்றதாகும். 

அதனால் மேற்படி விடயங்களை தீர்மானிக்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியங்களையே சார்ந்துள்ளது. அந்த தெரிவு யாதென எமக்கு அறிவிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேநேரம் ஜூலை மாத இறுதிக்குள் பிணைமுறிகள் பரிமாற்றம் நிறைவு செய்யப்படும். அவர்களின் பணப்புழக்கத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய நிவாரணமொன்று கிட்டும். மேலும் பிணைமுறிகள் பரிமாற்றத்தின் போது 5 வருட சலுகை காலமொன்று வழங்கப்படும் என்பதோடு, கையிருப்பில் உள்ள பிணைமுறிகளுக்கு மாத்திரமே வட்டி  வழங்கப்படும். 2032 – 2038 ஆம் ஆண்டில் அதன் காலம் பூர்த்தியாகும். அதன் பின்னர் படிப்படியாக வருடாந்த அடிப்படையில் காலம் பூர்த்தியாகும்.

மத்திய வங்கி என்ற வகையில் நிதி நிலைத் தன்மை, வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பு என்பனவே எமது தலையீட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. மறுமுனையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பாளராகவும் மத்திய வங்கியே விளங்குகிறது. அந்த வகையில் ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான நல்லதொரு நீடிப்புக்கான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதே எமது நோக்கமாகும். இதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து செயற்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.“ என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: