வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!

Friday, August 14th, 2020

வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்பட்ட வயல் காணிகளை உடனடியாக விடுவித்து அடுத்த காலபோக செய்கையை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்சவுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நானும் பங்குபற்றியிருந்தேன்.

இதன்போது நான் வன்னி பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக அவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

இதன் பிரகாரம் பல வயல் நிலங்கள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு அவற்றில் விவசாயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது தொடர்பிலும் அதனை உடனடியாக விடுவித்து விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஆவன மேற்கொள்ளுமாறு தெரியப்படுத்தியிருந்தேன்.

இதற்கு உடனடி அனுமதி வழங்கப்பட்டதுடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வயல் காணிகளில் போடப்பட்டுள்ள எல்லைக்கற்களை அகற்றி எதிர்வரும் காலபோக செய்கையில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு ஆவன மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் மக்கள் எதிர்கொள்ளும் காணிகளுக்கான அனுமதிப்பத்திர விடயமும் சுட்டிக்காட்டப்பட்டதன் அடிப்படையில் உடனடியாக அதற்கும் தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலத்தில் குறித்த மாவட்டங்களில் காணி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சீர் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: