மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த தயார் – அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை!

Monday, June 13th, 2022

அரிசி மற்றும் நெல்லை தேவையில்லாமல் சேகரிக்க வேண்டாம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெல் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை . எனவே தேவையில்லாமல் அரிசி மற்றும் நெல்லை பதுக்கி வைக்காதீர்கள். நாட்டில் போதுமான நெல் இருப்பு உள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நெல் இருப்புக்கள் அரிசியாக மாற்றப்பட்டு சதொச விற்பனை நிலையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அந்த அரிசியை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,”

“சமீபத்தில், பிரதமரும், நானும் மற்றும் பல அமைச்சர்களும் நாட்டின் உண்மையான நிலைமை குறித்து பேசினோம். அந்த அறிக்கைகளுக்குப் பிறகு இந்த நாட்டில் பலர் தேவையற்ற அச்சத்தின் காரணமாக அரிசி மற்றும் நெல்லைக் குவிக்கத் தொடங்கினர்.

இது தேவையற்ற பயம். நாட்டில் போதுமான அளவு அரிசி இருப்பில் உள்ளது. யாராவது நெல்லை கையிருப்பு வைத்திருந்தால், அவற்றை சந்தைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த சில நாட்களில், நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் இருப்புக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த தயாராகவுள்ளோம். தற்சமயம் அவ்வாறான எண்ணம் இல்லை ஆனால் மக்கள் நலனுக்காக அவ்வாறு செய்ய வேண்டிய நிலை வரலாம்.

உண்மையை சொன்னதால் மக்கள் ஆர்வமாக பயிர் செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் 270,000 ஹெக்டேர் நெல் மட்டுமே பயிரிடப்பட்டது.

ஆனால் எங்களின் அறிவிப்புக்குப் பிறகு இந்நாட்டு மக்கள் ஆர்வமாக விவசாயம் செய்யத் தொடங்கியதால், தற்போது 470,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்படுகிறது.

உரம் இலவசமாக வழங்கப்பட்ட காலத்தை விட இந்த பருவத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது,” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: